தவானுக்கு பதில் மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை: விராட் கோலிதவானுக்கு பதில் மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை: விராட் கோலி

உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் காயம் அடைந்தார். அவரது பெருவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2 முதல் 3 வார காலம் விளையாட முடியாது.

இதனைத்தொடர்ந்து ரிஷப் பந்த் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆகையால் பந்த் இங்கிலாந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தவான் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மேலும் ஷிகர் தவானை பொருத்தவரை கை விரலில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் விரைவாக குணம் அடைந்து வருகிறது. தவான் ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன். தான் எப்படியாவது உலகக்கோப்பை போட்டிகளில் மீண்டும் பங்கேற்று விளையாட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அதிகப்படியாக உள்ளது. அத்தகைய எண்ணங்கள் தவான் காயத்திலிருந்து விரைவாக மீண்டு வர உதவிகரமாக அமையும்.

மேலும், லீக் ஆட்டங்களில் மாற்று வீரர்களாக விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப களமிறக்கி விளையாட உள்ளோம். ஆனால் அரையிறுதி ஆட்டங்களுக்கு முன்னதாக நிச்சயம் தவான் முழு உடல் தகுதி பெற்றுவிடுவார் என நம்புகிறோம். ஆகையால் தவானுக்கு பதிலாக உலகக்கோப்பை முழுவதற்குமான மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை.

இவ்வாறு கோலி கூறினார்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை (ஜூன் 16) நடைபெற உள்ளது என்பது. அதில் தவானுக்கு பதில் களம் இறங்கும் வீரர் யார் என்பது தெரிந்துவிடும்.

© 2018 Vettipo | All Rights Reserved.